“எங்கள் காசி யாத்திரை “
  பாகம் – 1
கடந்த 11/10/2017 புதன் அன்று நாங்கள் (மனைவியும் , நானும்) காசி செல்வதாக ஏற்பாடு.
இது ஒரு மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப் பட்ட விஷயம் .
காசிக்கு செல்வது , முக்கியமாக , பித்ரு காரியங்கள் செய்வதற்குத் தான் . நாங்கள் செல்ல நினைத்ததும் அதற்காகவே .பண்ணவேண்டியது அலகா பாத்தில் ஒரு ஸ்ரார்தம் , காசியில் , அப்பா ,அம்மாவுக்கு ஒரு ஸ்ரார்தம் , போட்டில் சென்று பஞ்ச கட்ட ஸ்ரார்தம் மற்றும் கயாவில் ஒரு பித்ரு ஸ்ரார்தம் . ஆக மொத்தம் நான்கு பித்ரு கர்மாக்கள் . மேலும் ஒரு தம்பதி பூஜை மற்றும் விளக்குமற்றும் பாயச தானம்ஆக மொத்தம் ஆறு நாட்கள் , மிகவும் மடி மற்றும் ஆச்சாரமாக இருக்க வேண்டிய கட்டாயம் .
                                                                  ” மடி தயாரிப்பு “
ஆறு நாட்களிலும் பஞ்ச கச்சம் கட்டாயம் .ஆண்களுக்கு ஆறு ஒன்பதுக்கு ஐந்து வேஷ்ட்டி (அதாவது , வேஷ்ட்டி + துண்டு ) முகம் துடைத்துக் கொள்ள ஒரு துண்டு இத்யாதி , ஆறு நாட்களுக்குமடியாக வேண்டும் . டெலி போனில் ஸாஸ்திரிகளிடம் கேட்டதற்கு ” இங்கே ,  ஒரே மழையாக இருக்கிறது . காய வைக்க வசதிப் படாது . அதனால் சென்னையிலேயே மடியை தயார் செய்து எடுத்து வந்து விடவும்” என்று சொல்லி விட்டார் . 
                                                          ” எப்படி மடி தயாரிப்பது “
சாயந்திரம் ஸ்நாநம் செய்யு முன் ஆறு ஒன்பது முழ வேஷ்ட்டி , பன்னி ரண்டு துண்டுகள் , ஆறு சிறிய ஐட்டங்கள் இவைகளை தண்ணீரில் நனைக்க வேண்டும் . பிறகு ஸ்நாநம் செய்ய வேண்டும் .பிறகு நனைத்து வைத்த துணியில் , ஜலத்தை ஊற்றி பிழிய வேண்டும் ஈரத்துண்டை கட்டிக் கொண்டு , அவைகளை , உயரே உள்ள கொடியில் , பிரர் கை தொடாத வண்ணம் காயப் போட வேண்டும்.

பாகம் – 2
மறு நாள் காலையில் ஸ்நாநம் செய்து , ஈரத் துண்டோடு , முதல் நாள் காயப் போட்ட துணிகளை எடுத்து , ஒரு வேட்டி , இரண்டு துண்டுகள் மற்றும் ஒரு சிறிய ஐட்டம் ஆகியவற்றை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு , பிறகு நம் கை அதன் மேல் படாதவாறு , பரம ஜாக்ரதையாக  ரப்பர் பேண்ட் போட வேண்டும் . இது போல் ஆறு பைகள் தயார் செய்ய வேண்டும் . இப்பொழுது ஆறு நாட்களுக்கும் மடி தயார். மனைவி ஸூபர்வைஸ் செய்ய , இத்தனையும் ஒரு நாள் காலை செய்து முடித்தேன் . ” ஜாக்ரதையாகபெட்டியில் வைத்து மூடுங்கோ . மடி தப்பிப்போனா ,பித்ரு கோபத்திற்கு ஆளாக வேண்டும் ” என்று மனைவியின் பயமுறுத்தல் வேறு .இதைக் கேட்டுக் கொண்டே வருகிறாள் எங்கள் வீட்டு தாயம்மா . ” அம்மா , மன்னிச்சுடுங்க அம்மா . காலயில் வந்த உடன்தெரியாமல் இந்த துணிகளின் மேல் பட்டு விட்டேன் ” என்கிறாள் . எனக்கு எப்படி இருந்திருக்கும் . திரும்பவும் அத்தனை துணிகளையும் ,மறு நாள் மடி செய்தேன் . காசிக்கு போகும் போது பெட்டி நிறைய மடி சாமான் தான் . கொடுமை என்ன வென்றால் , நாங்கள் போய் தங்கி இருந்த பத்து நாட்களும் , காசியில் வெய்யில் கொளுத்திஎடுத்தது. பொட்டு மழை கூட இல்லை.

பாகம் – 3
11/10/2017 புதன் அன்று , மதியம் 2 மணி சுமாருக்கு flight ல்  காசிக்கு புறப்பட்டு , சாயந்திரம் ஆறரை மணி சுமாருக்கு காசி airport ஐ அடைந்தோம் .  ஒரு லாட்ஜில் ரூம் புக் செய்திருந்தார்கள் .வாத்யார் ஆத்திலிருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் இந்த லாட்ஜ் இருந்தது . ஏர் போர்ட் ல் இருந்து லாட்ஜ் செல்ல ஒன்றரை மணி நேரம் பிடித்தது . அத்தனை நெரிசல் . சும்மா சொல்லக் கூடாதுஏஸி  லாட்ஜில் சூபராக வேலை செய்தது . 24 மணி நேரமும் வெந்நீர் இருந்தது . ஆனால் ஒரு உபத்திரவம் . பாத் ரூம் குழாயில் , லொட்டு , லொட் டென்று தண்ணீர் பக்கெட்டில் சொட்டிக்கொண்டிருந்த சத்தம் காதுக்கு (எனக்கேநாராசமாக இருந்தது.எனக்கு காது கொஞ்சம் மந்தம். மேனேஜரைக் கூப்பிட்டு அதை நிறுத்த சொன்னேன் . அவர் முயற்சி செய்தார் . பலன் இல்லை .ஆனால் ப்ரமாதமாக , சப்தத்தை நிறுத்த ஒரு வழிசெய்துவிட்டு , ஒரு சிரிப்பு சிரித்தாரே பார்க்கணும் ! நீங்களாய் இருந்தால் , ப்ளம்பரை கூப்பிடாமல் சப்தத்தை நிறுத்த என்ன செய்தி ருப்பீர்கள்என்றுயோசித்து விட்டு மேலே படிக்கவும் .ரொம்ப சிம்பிள் . ஏன் சப்தம் கேட்கிறது ? பக்கெட் டில் இருக்கும் தண்ணீரில் குழாயில் இருந்து நீர் சொட்டு வதால் , சப்தம் கேட்கிறது . சரிதானே? அதற்கு குழாயை ஏன் ரிப்பேர் செய்ய வேண்டும் ? அவர் செய்தது இது தான் . பக்கெட்டை குழாயிலிருந்து நகர்த்தி வைத்துவிட்டார் . தண்ணீரை தரை யில் சொட்டும்படி செய்து விட்டார் . சப்தம் நின்று விட்டது . அவருக்கு ஒரே சந்தோஷம் . ஆனால் விலாசினி (என் மனைவிசொன்னது தான் தமாஷ் . அவள் பையா(bhaiya) இப்படி தண்ணீர் வீணாகப் போனால் கடையில் காசு தங்காது ” என்று , லாட்ஜை காலி செய்யும் போது சொல்கிறாள் .இதை முன்னாலேயே சொல்லி இருக்கலாமே என்று உங்களுக்கு தோன்றலாம் . சொல்லி இருந்தால் , ரிப்பேர் செய்கிறேன் பேர்வழி என்று அவர் வந்து விட்டால் கதவை திறந்து விட்டு நாங்கள் வெளியே போக முடியாது . எல்லாம் சுயநலம் தான். Refresh செய்து கொண்டு லாட்ஜை விட்டு வெளியே வந்தால் …………

பாகம் – 4
Refresh செய்து கொண்டு , வாத்யார் ஆத்துக்கு செல்ல , லாட்ஜின் வெளியே கால் எடுத்து வைக்கிறோம் . ராம நாமம் முழங்க காசியில் முக்தி அடைந்த ஒரு ஆத்மா எங்களைகடந்து செல்கிறது . சின்னக் குழந்தைகள் கூட அச்சமின்றி அதை கண்டும் காணாமல் விளையாடிக் கொண்டு இருக்கின்றன . அவர்களுக்கு , இது தினசரி காசியில் நடக்கும் ஒரு சம்பவம் . அவ்வளவே.பக்கத்தில் நின்றிருந்த ஒரு அம்மாள்  ” நல்ல சகுனம் ” என்று சொல்கிறாள் . காசியில் இது போல நல்ல சகுனத்திற்கு பஞ்சமே இல்லை .சிறிது நின்று விட்டு , ஸ்வாமி மலை ஸ்ரீ க்ருஷ்ண மூர்த்தி கனபா டிகள்வீட்டிற்கு சென்றோம் . பதி நான்கு வருடங்களுக்கு முன் , நாங்கள் காசி சென்ற போது , மிகவும் உத்ஸாகமாக உபசரித்த கன பாடிகள் , எண்பதைக் கடந்து வயோதிகத்தால்தளர்ந்திருந்தார் . ஆனால் கம்பீரமோ , ஞாபக சக்தியோ , மந்திரம் சொல்லும் சக்தியோ சிறிதும் குறையாமல் அன்போடு வர வேற்றார் . நாங்கள் செய்த தம்பதி பூஜையை ,மனைவியுடன் அமர்ந்து ஏற்றுக் கொண்டு , ஆசீர்வதிக்கவும் செய்தார் . அவர் மகன் ரமணாவும் , அவர் சகோதரரின் மகன் சிவாவும் , எங்கள் காசி யாத்திரையை நல்ல படியாகச்செய்ய , எல்லா ஏற்பாடுகளும் மிக நன்றாக செய்திருந்தார்கள் . காசியில் இருந்த படியே , அலஹா பாத்திலும் , கயாவிலும் , அவர்கள் முன் கூட்டியே செய்திருந்த ஏற்பா டுகளும்அங்கு அவர்களுக்கு இருந்த மரியாதையையும் கண்டு வியந்துதான் போனோம் . காசி சென்றதும் , நாங்கள் ,எங்களை , அவர்களிடம் முழுதுமாக , எந்த ஐயங்களும் இன்றி ஒப்படைத்து விட்டோம் .எங்கள் நம்பிக்கைக்கு சிறிது அளவு கூட பங்கம் இல்லாமல் , நாங்கள் தங்கி இருந்த பத்துநாட்களும் அவர்கள் எங்கள் யாத்திரையை நடத்திக் கொடுத்து பூர்த்தி செய்து கொடுத்தார்கள்.எப்படி என்று அடுத்த பாகத்தில் சொல்கிறேனே.

பாகம் – 5
காசி மாறவே இல்லை . பதினைந்து வருடங்களுக்கு முன் எப்படி பார்த்தேனோ அப்படியே உள்ளது . தெருவெங்கும் பால் ஆறு ஓடுகிறது . திரும்பிய இடமெல்லாம் பால் , ரபடி , தயிர் மற்றும்லஸ்ஸி கடை கள் தான்.கள்ளிச் சொட்டாக பால் குடிக்கவே காசிக்கு போகலாம் . தண்ணீரே கலக்க மாட்டார்கள் . வெள்ளைப் பண்டத்தில் தண்ணீர் கலந்தால் பாபம் என்று நம்பும் வ்யாபாரிகள் .அதை இக் காலத்திலும் பின் பற்றுவது வியப்பு தான். பால் ஆறு மாத்திரம் ஓடவில்லை . தெருவில் மாடும் ஓடுகிறது . பாலை கறந்து விட்டு , மாட்டை கட்டாமல் விட்டு விடுகிறார்கள் . காசியில் ,மாடு முட்டாது என்று சொல்கிறார்கள் . இது மாட்டுக்கு தெரியுமா என்று தெரியவில்லை . திரும்பிய பக்கம் எல்லாம் மாடு தான்நாம் தான் மாட்டின் மேல் முட்டாமல் செல்ல வேண்டும் . எல்லாம்குறுகலான சந்துகள் . ஒரு மாடு நின்றாலே , நாம் மேலே போக முடியாது . அதை விரட்டவும் பயமாக இருக்கும் . ஏன் என்றால் அது திருப்பி விரட்டாது என்ற உத்தரவாதம் இல்லை . அப்படி ஏதாவது நடந்தால் , உடனே நம்மால் திரும்பி ஓட முடியாது . சந்து அத்தனை குறுகல் . சமாளித்து , ஒரு வழியாக வாத்யார் ஆத்தைஅடையும் போது மணி இரவு எட்டு . நம் சென்னை மாதிரி , ஹோட்டல்  எல்லாம் நினைத்து பார்க்கவே முடியாது . வாத்யார் ஆத்திலேயே சூடாக இட்லி , தோசை , உப்புமா போன்ற டிபனை அன்போடு போடுகிறார்கள். கணக்கு வைத்து ஊர் திரும்பும் அன்று நம்மிடம் பணம் வாங்கிக் கொள்கிறார்கள். கயா சென்ற ஒரு இரவைத் தவிர , மற்ற எல்லா நாட்களுமே வாத்யார் ஆத்தில் தான்டிபனும் சாப்பாடும். (ஒரு பகல் மட்டும்நண்பர் சுந்தரேச மாமா ஆத்தில் சாப்பிட்டோம்) . பஞ்சு , சாப்பாடு பற்றிய உன் கேள்விக்கு பதில் சொல்லி விட்டேன்.

பாகம் – 6
11/10/2017 இரவே , மறு நாள் காலை ஐந்தரை மணிக்கு , அலஹாபாத் செல்ல , சிவா , எல்லா ஏற்பாடு களும் செய்து விட்டார் . சாஸ்திரிகளுக்கும் முன் கூட்டியே சொல்லி ஆகிவிட்டது .12/10/2017 வியாழன் அன்று , பம்பாயி ல் இருந்து வந்திருந்த , ஒரு தாய் , மற்றும் அவர் மகன் ரவியுடன் , விடியற் காலை நான்கு பேர் செல் லும் காரில், காசியில் , கால பைர வரை தரிசித்து விட்டுஅலஹாபாத் புறப் பட்டோம் . ரவிக்கு ஹிந்தி தெரிந்தது ரொம்ப ஸௌகர்யமாய் இருந்தது . தனியாக போகிறோமே, பாஷையும் தகராரே என்று , கவலை பட்டுக் கொண்டிருந்த விலாசினிக்குபெரிய நிம்மதி.(எனக்கும் தான்) ” தெய்வம் மனுஷ்ய ரூபேன” என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். எனக்கு ஹிந்தி தெரியுமா என்று ரவிகேட்டார் .. ஹிந்தி நஹி மாலும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்று சொன்னேன். சுமார் ஒன்பதரை மணிக்கு அலஹாபாத் சென்றடைந்தோம். வேணீ மாதவர் , மற்றும் சஹஸ்ர லிங்கேஶ்வரரை தரிசித்து விட்டு த்ரிவேணி சங்கமத்துக்கு சென்றோம்.போன தடவையே வேணி தானம் செய்து விட்டதனால் , மறுபடி செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார்கள் . அதனால் நால்வரும் போட்டில் சிறிது தூரம் சென்று, கழுத்து மட்டும் ஜலத்தில்இறங்கி ஸ்நாநம் செய்து திரும்பினோம். பிறகு , வாத்தியார் ஆத்திற்கு வந்து பித்ரு காரியங்களை செய்தேன் .  கட்டி இருந்த வேஷ்ட்டியையும் துண்டையும் அங்கேயே விட்டு விட சொல்லிவிட்டார்கள் . பிறகு , அங்கேயே ஆஹாரத்தை முடித்துக் கொண்டு , சுமார் இரண்டு மணிக்கு அலஹாபாத்திலிருந்து கிளம்பி , இரவு சுமார் எட்டு மணிக்கு திரும்ப காசியை அடைந்தோம். வாத்யாராத்தில் இரவு டிபனை முடித்துக் கொண்டு , வரும் வழியில் பட் கடையில் சூடாக பால்அருந்திவிட்டு லாட்ஜை அடைந்தோம் . மறு நாள் விடியற் காலை மஹா சங்கல்பத்துக்கு கிளம்பவேண்டும்.

பாகம் – 7
13/10/2017 விடியற் காலை எழுந்து மணி கர்ணிகா கட்டம் சென்று கங்கையில் ஸ்நாநம் செய்தோம் . கங்கை ஒன்றும் ப்ரவாகமாக ஓடவில்லை . நிறைய படிகள் கீழே இறங்கவேண்டி இருந்தது . இன்னும் கூட முட்டிவலி போக வில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் . ஸ்நாநம் முடித்து , ஈர வேஷ்டியை பிழிந்து , உதறி கட்டிக் கொண்டேன் . ( ஈரம்சொட்ட , சொட்ட ஸங்கல்பத்திற்கு உட்காரக் கூடாது . எல்லோரும் அவசியம் கவனிக்கவேண்டியவிஷயம் )  பிறகு , கரை ஏறி , வாத்யா ராத்துக்கு வந்து மஹா சங்கல்பம் (அதாவது முழு யாத்திரைக்கானசங்கல்பம்) செய்து கொண்டேன் . ஒருசின்ன நெருடல் . வரும் வழியில் வருவோர் , போவோர் எல்லாம் மேலே இடித்துக் கொண்டே சென்றார்கள் . ” பித்ரு காரியம் . மடி தப்பக் கூடாது” என்று ஏற்கனவே , விலாசினிபயமுறுத்தியது ஞாபகத் துக்கு வந்து விட்டது . மனது கேட்காமல் , திரு சிவாவிடம் மடிக் குறைச் சலாய் போய் விட்டதாக சொன்னேன் . அதற்கு ” காசியில் , மடி ஆசாரம் என்பதே கிடையாது . பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்ற மனஸும் , ஶ்ரத்தையும்தான் முக்கியம் ” என்று சிவா சொன்னார் . மனது லேசானது மட்டுமில்லை , கொஞ்சம் விவேகமும் வந்ததாக உணர்ந்தேன் .பகல் உணவை முடித்துக் கொண்டு , லாட்ஜ் திரும்பினோம்.  சாயந்திரம் திரும்ப மணி கர்ணிகா கட்டம் சென்று , சுமார் 40 பேர் போட்டில் , கங்கா ஹாரத்தியை காண சென்றோம்.(போன தடவை ஹாரத்தி பார்க்க வில்லை) கங்கா ஹாரத்தியின் அழகை , வர்ணிக்க வார்த்தை இல்லை .  அவசியம் நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று . நல்ல இருட்டு . போட்டில் மிதக்கும் போது நல்ல குளிர்ந்த காற்று. 
ஜால்ராவை கொட்டிக் கொண்டு , பாட்டு பாடிக் கொண்டு , கங்கைக்கு தீப ஹாரத்தி காண்பிக்கும் போது , தீபங்களின் பிம்பம் கங்கை ஜலத்தில் மின்ன , ஸ்வர்க லோகமே காசியில்இறங்கியதாக உணர்ந் தேன் . திரும்பவும் வாத்யாராம் . சுடச் , சுட டிபன் . பட் (Bhat) கடையில் ரபடி . Back to Lodge. நல்ல தூக்கம் . மறு நாள் 14/10/2017 அப்பா , அம்மாவுக்கு ஸ்ரார்தம்செய்ய காலையில் கிளம்ப வேண்டும் .

பாகம் – 8
14/10/2017 அன்று மணி கர்ணிகா கட்டத்தில் ஸ்நாநம் செய்து , அப்பா , அம்மாவுக்கு ஸ்ரார்தம் செய்ய வாத்யார் ஆத்துக்கு வந்து விட்டோம். அன்று , என்னுடன் சேர்த்து மூன்று தம்பதிகள் ,ஸ்ரார்தம் செய்தனர் . அதில் நான் ஸாம வேதக் காரன்மற்ற இருவரும் யஜுர் வேதக்காரர்கள். வேதத்திற்கு வேதம் , சில இடங்களில் மந்திரங்கள் ஒன்றாக இருக்கின்றனபல இடங்களில்மாறுபடுகின்றன. அதில் ஸ்ரீ ரமணன் மிக ச்ரத்தையாக ,எங்களை வழி நடத்தி சென்றார் . பூணூல் இடம் , வலம் செய்யும் போது கவனித்து பார்த்து பார்த்து செய்தார் . அதே போல் , பவித்ரம் எப்பொழுது கையில் இருக்க வேண்டும் , எப்பொழுது காதில் செறுகிக் கொள்ளவேண்டும் என்பதிலும் கண்டிப்பாக இருந்தார். ஸாம வேதக்காராளுக்கு , அக்னி ப்ரதானம் .ஒரு தட்டு நிறைய என் எதிரே , அக்னியை வைத்திருந்தார்கள் .விலாசினி அதை எடுத்து ஹோமகுண்டத்தில் போட வேண்டும் .  அக்னி தட்டு வைத்திருந்த இடம் , கொதித்து போய் இருந்தது . அது தெரியாமல் , காலை , அங்கு நன்றாக ஊன்றி விட்டாள்கால் நன்றாக பழுத்துவிட்டது . மனதுக்குகஷ்டமாக இருந்தது . இதை எதற்கு எழுதுகிறேன் என்றால் , இதைப் போன்ற , சின்னச் சின்ன தவறுகள் நம்மை பாடாய் படுத்தும் . கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் . சமையல்செய்த மாமாவைப் பற்றி , இங்கு சொல்லியே ஆக வேண்டும் . அத்தனை ச்ரத்தை . மூன்று திவசக் காராளுக்கும் , மூன்று அடுப்பில் தனித் தனியாக சமையல் செய்திருந்தார் . நம் ஊரில் தான திவசகாரியங் களில் , உருளைக் கிழங்கு சேர்ப்பது இல்லை . காசியில் விதி விலக்கு . தாராளமாக சேர்க்கிறார்கள் . ப்ரம்ம சாரிகளும் பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு ப்ராம்மணார்த்தம் சாப்பிடுகிறார்கள் .தயிர் தான் ,அவர்களுக்கு ப்ரதானம் . தயிர் சாதத்தில் , தாராளமாக சர்க்கரையை சேர்த்து சாப்பிடுகிறார்கள் . ஊர்திரும்பிய பிறகு நான்அது போல சாப்பிட்டு பார்த்தேன் . நன்றாகத்தான் இருக்கிறதுடயாபடிக் இல்லாதவர்கள் தாராளமாக முயற்சி செய்யலாம்என்ன ஒன்று , அடுத்த மாதத்தில் இருந்து , சர்க்கரை , கொஞ்சம் கூட செலவாகும் (கவனிக்க . சர்க்கரை விலை , ஒன்றாம் தேதியில்இருந்து ஏறி விட்து )

பாகம் – 9
சரி , ஸ்ரார்தக்கு வருவோம் . வருடா வருடம் அப்பா , அம்மாவுக்கு , அவர் அவர் திதிகளில் தனித் தனியாகத் தானே செய்வோம் . ஆனால் , காசியில் எந்த திதியானாலும் அன்று ,இரண்ய ஸ்ரார்தத்தில் செய்வது போல இரண்டு பேருக்கும் ஒன்றாக செய்வோம் .அப்பாவுக்கு ஸ்ரார்தம் செய்யும் போது , அவரைப் பற்றிய நினைவுகளே மனதை ஆக்ரமித்துஇருக்கும். ஆனால் , அம்மாவுக்கு ஸ்ரார்தம் பண்ணும் போது , அம்மாவின் நினைவை விட எனக்கு , அது பிடிக்கும் , இது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து அவள் செய்தசமையல் தான் ஞாபகத்துக்கு வந்து கண்கள் நிறைந்துவிடும் . அம்மா , பெருங்காயத்தை , சமையலில் ஊரே மணக்க மணக்க சேர்ப்பாள் . பெருங்காயம் இல்லாமல் , அளுக்குசமைக்கத் தெரியாது . அதனால் அவளுக்கு ” பெருங்காய நாயகி ” என்று பெயர் வைத்து இருந்தேன் . அதே போல் , என் பெரியம்மா மீனாக்ஷி சமையலில் கொஞ்சம் உப்புதூக்கலாக மிக நன்றாக இருக்கும் . அதனால் அவளுக்கு ” லவன குமாரி ” என்று பெயர் வைத்திருந்தேன் . பெருங்காய நாயகியும் , லவன குமாரியும் சேர்ந்துவிட்டால் சமையல்கட்டு திமிலோகப் படும்.காசியிலும் , ஸ்ரார்தம் செய்யும் போது இந்த நினைவுகள் வழக்கம் போல வந்தன. 
காசியில் , ஸ்ரார்தத்தின் போது , அப்பா வழி மற்றும் அம்மா வழி பித்ருக்கள் பன்னிரண்டு பெயர்கள் தவிர , இறந்து போன தாய் மாமா , மாமி , சகோதர சகோதரிகள் , சித்தப்பா ,சித்தி , அம்மாவின் சகோதரிகள் ஆகியோருக்கும் தர்ப்பனம் செய்ய வேண்டும் . கயாவில் இத்தனை பேருக்கும் பிண்டம் போட வேண்டும். நானும் மாமா , பெரியம்மா , எனக்குமுன்னே பிறந்து , மிகவும் செல்லமாக வளர்க்கப் பட்டு , நான் பிறப்பதற்கு முன்னேயே மறைந்து விட்ட என் சகோதரிவஸந்தாவுக்கும் , என்னை , தன்குழந்தையாக பாவித்து சீராட்டிய என் சித்தப்பா நடராஜுவுக்கும் தர்ப்பணம் செய்தேன் . அப்பொழுது மனது மிகவும் கனத்து விட்டது .ஸ்ரார்தம் முடித்து , நண்பர் சுந்தரேச மாமா ஆத்துக்கு போனோம் . மாமாவின் உதவியால் , ஸ்ரீ விஶ்வநாதருக்கு நடந்த சப்தரிஷி பூஜையை பார்த்து பரவசம் ஆனோம் .இரவுவாத்யார் ஆத்தில் சப்பாத்தி . வழக்கம் போல் பட் கடையில் பால் . இரவு லாட்ஜில் தூக்கம் . மறு நாள் 15/10/2017 பஞ்ச கட்ட ஸ்நாநம் செய்து கயா செல்ல வேண்டும்.

பாகம் – 10
15/10/2017 அன்று விடியற் காலையில் பஞ்ச கட்ட ஸ்நாநம் செய்ய கங்கை கரையை அடைந்தோம். கங்கை கரையில் அமைந்துள்ள 64 கட்டங்களில் முக்கியமானதாக கருதப் படும் , 1 . அஸ் சங்கமகட்டம் , 2 . தஶாஸ்வமேத கட்டம் , 3 . வரண சங்கம கட்டம் ,
4. பஞ்ச கங்கா கட்டம் மற்றும் 5 மணி கர்ணிகா கட்டம் ஆகியவற்றுக்கு , போட்டில் பயணம் செய்து , ஒவ்வொரு கட்டத்திலும் இறங்கி , தம்பதியாக ஸ்நாநம் செய்து பித்ருக்களுக்கு பிண்டம் போடவேண்டும் . பெண்கள் , ஒரு குமுட்டி அடுப்பில் , கரியில் தணல் மூட்டி , ஒரு சிறிய பாத்திரத்தில் கங்கையிலேயே கொஞ்சம் ஜலம் எடுத்து , கைப் பிடி அரிசி போட்டு கொதிக்க வைக்கிறார்கள் . ஒருகட்டத்தில் இருந்து , அடுத்த கட்டம் போவதற்குள் சாதமாகி அதை பிண்டமாகவும பிடித்து விடுகிறார்கள் . இப்படி ஐந்து கட்டங்களையும் முடிக்க , இரண்டு மணி நேரம் ஆகியது . அந்த அந்த கட்டங்களில் உறையும் தெய்வங்களையும் தரிசித்தோம் .பிந்து மாதவர் மற்றும் சீதளா தேவி மிக முக்கியம் வாய்ந்தவர்கள் . இந்த சீதளா தேவி மீது ,ஸ்ரீ முத்து ஸ்வாமி தீக்ஷிதர் சீதளாம்பாம் ஸதா பஜேஹம் என்ற வஸந்தா ராக கீர்த்தனையை இயற்றி உள்ளார் . அதை யூ ட்யூபிலும் பாடி உள்ளேன் . அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்தவள் .ஸ்ரீ க்ருஷ்ணனை கம்சனிடம் இருந்து காப்பாற்றியவள் . நம்மையும் நிச்சயம் காப்பாள்.பஞ்ச கட்ட ஸ்நாநம் முடித்தபின் , பெண்கள்கங்கை நீரைக் கொண்டே கங்கைக்கு கங்கா பூஜை செய்தார்கள் .  ஒன்று குறிப்பாக சொல்ல வேண்டும் . போட்டை செலுத்தும் சுரேஷ் போன்றவர்களுக்கு, எப்படி கர்மாக்களை செய்ய வேண்டும் , என்ன செய்யக் கூடாது , பவித்ரத்தை எப்பொழுது அணியவேண்டும் , எப்போது கூடாது என்பதெல்லாம் அத்துபடி. பிறகு , போட்டிலிருந்து இறங்கி , வாத்யாராத்தில் சாப்பிட்டு விட்டு கயா புரப்பட தயாரானோம்.

பாகம் – 11
15/10/2017 மதியம் , சுமார் 2 மணிக்கு , கயா புறப் பட்டோம் . கிட்டத் தட்ட 6 மணி நேர ப்ரயாணம் என்று சொன்னார்கள் . எக்கச்சக்க traffic . இரவு கயாவைஅடையும் போது மணி
பத்தரை . சிவா , கிளம்பும் போது , ப்ராம்மணாளுக்கு போட , ஒரு வாழை இலைக் கட்டையே எங்களிடம் கொடுத்து அனுப்பி இருந்தார் . ஆனால் ஒன்றை கவனிக்க மறந்து விட்டார் . நாங்க ளும்தான் . என்ன என்று பிறகு சொல்கிறேன். எங்களுடைய safety க்காக , சிவா மிக ச்ரமம் எடுத்துக் கொண்டார் . ஏனோதானோ என்று அனுப்ப வில்லை . பாஷை தெரியாத ஊர் வேறு.இங்கும் , விலாசினி சொல்படி , தெய்வம் மனுஷ்ய ரூபேன. சிவா , எங்களுடன் , திருவிடை மருதூரைச் சேர்ந்த ஒரு தம்பதியரை சேர்த்து விட்டார் . அலஹாபாத் மாதிரியே , காரில் நான்கு பேர்பயணம். மாமா , மாமி இருவரும் தமிழ் நாட்டு தெலுங்காள் . தமிழ் , ஹிந்தி இரண் டும் சரளமாக பேசினார்கள் . மாமா மிகவம் சரளமாக. கார் ட்ரைவர் சிறிய வயதுவயது 25 மதிக்கலாம்மிகவும்சத்தமாக பேசினான் . எனக்கே நாராசமாக இருந்தது என்றால் பார்த்தக் கொள்ளுங்கள் .” சத்தம் தாங்க முடியலயே மாமா . ஆறு மணி நேரம் இந்த ஹிம்சையை தாங்க வேண் டுமே ” என்றுசொன்னேன் .ட்ரைவர் மாமாவிடம் ஏதோ சொன்னான்.எனக்குத் தான் புரியாதே . என்ன என்று மாமாவிடம் கேட்டேன்ஏன்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது . ” எனக்கு தமிழ் கொஞ்சம் புரியும் என்று சொல்கிறான் ” என்று மாமா சொன்னார். இனி நான்ஏன் வாயை திறக்கப் போகிறேன் ! நானும் , விலாசினியும் , பிறகு தூங்கிப் போனோம் . மாமாவும் , மாமியும் தூங்க முடியாத படிஇரட்டை தவில் கச்சேரி செய்ததாக ,சொன்னார்கள். குரட்டையைத்தான் சொல்கிறார்கள் . கார் ட்ரைவரும் அரண்டு போய் , பிறகு சிரித்ததாக வேறு சொன்னார்கள் . Traffic ல் நீந்தி சுமார் பத்தரை மணிக்கு கயா சென்றோம்.அப்பொழுது ட்ரைவர் , ஒரு கேள்வியைக் கேட்டு , பெரிய குண்டை தூக்கி போடுகிறான்.வேறு ஒன்றும் இல்லைஎந்த அட்ரஸ் என்று கேட்கிறான் . அவன் கயாவுக்கு புதிது .
சிவா அவனிடம் அட்ரஸ் சொல்ல மறந்து விட்டார்அவனுக்கு தெரியும் என்று நினைத்து விட்டார் . எங்களைப் பற்றிதான் உங்களுக்கு தெரியுமே . நாங்களும் சிவாவிடம் அட்ரஸ் கேட்டுக்கொள்ளவில்லை . இதைத்தான் பிறகு சொல்வதாக சொல்லி இருந்தேன் . எங்களுக்கு தெரிந்து இருந்தது எல்லாம் , நாங்கள் தங்கப் போகும் வீட்டுஓனர் ” பீனா குமாரி என்றும் , வீட்டு வாசலில் ஒரு வேப்ப மரம் இருக்கும் ” என்பது மட்டுமே . எங்கள் போதாத காலம் , போனபுயலில் , வேப்ப மரம் விழுந்து விரகாகி இருந்தது . கும்பிருட்டில் , அட்ரஸ் தெரியாமல் ஒரு மணி நேரம் , வேப்ப மர பங்களா வையும் , பீனா குமாரியையும் தேடி சோர்ந்து போனோம் . ஒருவழியாக மொபைலில் சிவா கிடைத்து , அட்ரஸ் கிடைத்து விட்டது. ட்ரைவர் ப்ருஹஸ்பதி , அட்ரஸ் தெரிந்தும் , கண்டுபிடிக்க தடுமாறினான் .ஒரு வழியாக , பீனாகுமாரியை கண்டுபிடிக்கும் போது மணி இரவு 11 . சும்மா சொல்லக் கூடாதுஅந்த அகாலத்திலும் , நாங்கள் வருவோம் என்று தெரிந்து , அங்கிருக்கும் ராதைமாமி , சப்பாத்தி , டால் மற்றும் சூடாக பால் வைத்திருந்தார் .சப்பாத்தியை சாப்பிட்டு , பாலை குடித்து விட்டு படுக்கச் சென்றோம்.  மறு நாள் காலை எழுந்து , கயா ஶ்ரார்தம் செய்ய செல்ல வேண்டும்.

பாகம் – 12
மறு நாள் 16/10/2017  காலையில் ஸ்நாநம் செய்து , மடி உடுத்திக்  கொண்டு , ஸ்ரார்தம் செய்யும் இடத்திற்கு சென்றோம் . அநேகமாக ஐம்பது பேர்களுக்கு மேல் ஸ்ரார்தம் செய்ய கூடி இருந்தார்கள். ஐம்பது தற்காலிக ஹோம குண்டங்கள் சிறிய கற்களை கொண்டு வைக்கப் பட்டு இருந்தன .அதில் மூன்று பேர்கள் மாத்திரம் சாம வேதிகள் . பாக்கி அத்தனை பேரும் யஜுர் வேதக்காராள்.ஸ்ரார்தம் , தனித் தனியாக பண்ணிவைத்த பாங்கு , சொல்ல வார்த்தைகள் இல்லை .மொத்தம் 64 பிண்டங்கள் . ஸ்ரார்தம் ஜாதி மத பேதங்களை கடந்தது.எப்படி என்று பின்னால் புரியும் . அதில் 17 பிண்டங்களை , அம்மா நம்மை வயிற்றில் சுமக்கும் போதும் , நாம் வயிற்றை விட்டு வெளி வந்த பின்பும் நமக்காக பட்ட துன்பங்களை 17 தனித் தனிமந்திரங்களில் சொல்லி , அம்மாவுக்காக வைக்கிறோம் . ஒவ்வொரு மந்திரத்திற்கும்வாத்யார் அர்த்தத்தை சொல்கிறார். இந்த பிண்டங்களை வைக்கும் போது அழாமல் இருக்க முடியாது . இங்கு ஒரு true confession செய்ய விரும்புகிறேன் . ஒரு தீபாவளி சமயம் . அம்மாஎன்ன பக்ஷணம் வேண்டும் என்று கேட்கிறாள் . தேங்குழல் ” என்று சொல்கிறேன் . ஆத்தில் ட்யூஷன் வாத்யார் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் ஐயர் ட்யூஷன் எடுக்க வந்து விட்டார் . ட்யூஷனில் மனம்செல்லவில்லை . மனம்முழுவதும் , தேங்குழல் , தேங்காய் எண்ணையில் பொறியும் வாசனையிலேயே லயித்து கிடந்தது . எனக்கு , உடைத்து வைத்த தேங்குழலை சாப்பிட பிடிக்காது .ரௌண்டாக இருக்கும் அதை , கையில் எடுத்து , கொஞ்சம் , கொஞ்சமாக உடைத்து சாப்பிட வேண்டும் . இது அம்மாவுக்கும் தெரியும் . ரௌண்டாக  50 தேங்குழல் செய்திருந்தாள் . ட்யூஷன் முடிந்து , ஒரே ஓட்டமாக சமையல் கட்டுக்கு ஓடினேன் . அங்கு பக்கத்தாத்து பெண் ,ஒரு முழு தேங்குழலை கையில் வைத்து தின்று கொண்டு இருந்தாள் .

 ” எப்படி எனக்கு முன் கொடுக்கலாம் ” என்று வந்ததே கோபம் எனக்கு . அந்த தேங்குழல்களை நான் அதன் பிறகு திரும்பிக்கூட பார்க்கவில்லை . வெகு நாட்கள் அதை யாரும் சாப்பிடாமல்
வீணாகப் போயிற்று . இது ஏனோ அம்மாவுக்கு பிண்டம் போடும் போது இத்தனை வருஷம் கழித்து நினைவுக்கு வந்து ஆட்டி வைத்தது . செய்கையாலும் அம்மாவை படுத்தி இருப்பது
வேதனை அளித்தது .

பாகம் – 13
” ஜாதி , மத பேதம் இல்லாமல் ” என்று குறிப்பிட்டு இருந்தேனே . அதற்கு வருகிறேன் . அப்பா , அம்மா வழி 12 பித்ருக்கள் அம்மா வழி மாமாவுக்கு என்று ஒரு பிண்டம் வைத்த பிறகு, வாத்யார்சொல்கிறார் ” ஜாதி , மதங்களை கடந்து , உங்கள் வாழ்க்கையில் , உங்களுடன் வாழ்ந்து , மறைந்து போன உங்களுக்கு பிடித்தமான மனிதர்கள் , ப்ராணிகள் , மரம் செடி கொடிகள் , நண்பர்கள் என , சகலத்தையும் மனதில் நினைத்து , பாக்கி இருக்கும் , அத்தனை பிண்டங்களையும் , ஒவ்வொன்றாக வையுங்கோ ” என்று .     எனக்கு மிகவும் பிடித்த , நான் பார்க்காத , என் ஸகோதரி வஸந்தா முதற் கொண்டு , என்னை என் அம்மாவை விட அதிகம் நேசித்த என் ராசம்மா வரை(ராசம்மா , யார் என்று உங்களுக்குதெரியுமே) என் ஜூலி , ஜிம்மி முதல் நான் நேசித்த பசுமாடு , கன்று , இரண்டு பாதிரி மரங்கள் மற்றும் செடி கொடிகள் வரை , எனக்கு முன்பு என்னை விட்டு பிரிந்து போய்
விட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு , மனதார நினைத்து நினைத்து பாக்கி , அத்தனை பிண்டங்களையும் போட்டேன் . நாம் வாழ்க்கையில் , எத்தனை இழந்திருக்கிறோம் என்பது ,அப்பொழுதுதான் நன்கு புரிந்தது . பல பிள்ளைகளில் , ஒருவனாவது வந்து கயா ச்ரார்தம் பண்ண மாட்டானா என்று நம் பித்ருகள் , கயாவில் , பல்குணி நதிக் கரையில் காத்திருப்பார்கள் என்று சாஸ்திரிகள் சொன்னார் . பின் , அங்குள்ள , விஷ்ணுபாதத்தில் , பிண்டங்களைப்  போட்டு விட்டு , பீனா குமாரி ஆத்துக்கு வந்து , ப்ராஹ்மண போஜனம் செய்வித்து , அக்ஷயவட ஆலமரத்திற்கு சென்றோம் . தவராமல் , பித்ரு ச்ரார்தம் செய்பவர்கள் , ச்ரார்தம் முடியும் போது கயா , கயா என்று சொல்லி அக்ஷய வடம் என்றும் சொல்வார்களே , அந்த நிஜ கயாவில் , நிஜ அக்ஷய வட மரத்தடியில் , திரும்பவும் 64 பிண்டங்கள் போட்டு ,முன்பு போடும் போது விட்டுப் போனவர்களை இப்பொழுது நினைத்து , காக்கைக்கு பிண்டம் போட்டு , கயாவாளியிடம் ,” த்ருப்தியாயிற்றா ”  என்று கேட்டு , அவர் த்ருப்தி சொன்ன பின்னர்சம்பாவனை செய்து , திரும்ப பீனா குமாரி ஆத்துக்கு வந்து , சாப்பிட்டு எழும்போது , மத்யாணம் , மணிமூன்று . 

           ஒன்று சொல்ல மறந்து விட்டேன். இந்த வயதில் காம , க்ரோத , மத மாத்சர்யங்களை விட வேண்டும்.ஆனால் முடியவில்லையே ! அதற்கு பதிலாக அத்திக்காய் , ஆல் இலை மற்றும்இலந்தை பழத்தை விட்டு வந்தோம் . விலாசினி பண்ணியதுதான் நிஜ sacrifice ஏன் என்றால் , அவளுக்கு இலந்தை வடாம் நிஜமாகவே பிடிக்கும். உடனேயே , காசிக்கு , காரில்
கிளம்பி , இரவு பத்து மணி சுமாருக்கு , காசியை அடைந்தோம் .பின் வழக்கம் போல , சிவா
ஆத்தில் டிபன் , பட் கடை பால் மற்றும் படுக்கை . மறு நாள் தம்பதி பூஜை செய்ய வேண்டும்.

பாகம் – 14
17/10/2017 அன்று மணிகர்ணிகா கட்டத்தில் ஸ்நாநம் செய்து , வாத்யார் அஹத்துக்கு வந்து விட்டோம் . அன்று தம்பதி பூஜை செய்தோம் . போன வருடம்தான் 80 பூர்த்தி செய்திருந்த மகா ஸ்ரீ ஸ்ரீக்ருஷ்ண மூர்த்தி கனபாடிகள் ( an authority in sasthras ) , அவரது மனைவியும் தான் தம்பதிகள் . அவர்களுக்கு தம்பதி பூஜை செய்ய கொடுத்து வைத்தி ருக்க வேண்டும் . பிறகு , ப்ராஹ்மண போஜனம்செய்வித்து ,சமாராதனை செய்தோம் . மத்யானம் , சுமார் 2 மணிக்கு , உத்தர காசியில் உள்ள museum  உத்தர காசி நாதர் கோயில் , பிர்லா மந்திர் மற்றும் ஆஞ்சனேயர் கோயில்களை தரிசித்தோம்.பின்பு தங்க அன்ன பூரணி மற்றும் காசி விசாலாக்ஷியை தரிசனம் செய்தோம் . மறு நாள் தீபாவளி.

பாகம் – 15
18/10/2017 அன்று , விடியற் காலையில் , எண்ணை தேய்த்துக் கொண்டு , லாட்ஜ் ரூமிலேயே ஸ்நாநம் செய்து ,மிளகு மருந்து , இங்கிருந்து கொண்டு போன லாடு இவைகளை சாப்பிட்டு , புதிதுகட்டிக் கொண்டோம் . பிறகு புதிய துணியைக் களைந்து , போட்டில் சென்று , பஞ்ச கட்ட 
ஸ்நாநம் செய்தோம்மஹா வாராஹியை , தரிசனம் செய்ய முயன்று முடியாமல் , ஏமாற்றத்துடன் திரும்பி விட்டோம். மத்யானத்துக்கு மேல் துர்க்கை அம்மனை தரிசித்து , பின் சோழி அம்மனைதரிசிக்கச் சென்றோம்.
     சோழி அம்மனைப் பற்றி , நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். காசியில் , மடி செய்து கொண்ட ஒரு மூதாட்டி வாழ்ந்திருந்தாள் . அவளிடம் , யாரோ ஸ்ரீ விஶ்வநாதருக்கு 108குடம் கங்கா ஜலத்தை , ஒரே நாளில் ஊற்றினால் ,அவளுக்கு மறு பிறவி கிடையாது என்று சொல்லி உள்ளார் . அதை நம்பி அவள் 107 குடங்களை அபிஷேகம் செய்து விட்டாள் . 108 வது குடம்எடுத்து வரும் போது , ஒரு தீண்டத் தகாதவன் (ஆண்டவனேஅவள் மேல் பட்டுவிட , திரும்பவும் கங்கையில் நீராடி , 108 வது குடத்தை எடுத்து வந்து , நம்பிக்கை இழந்து ,குடத்தை, கோபத்துடன்சிவன் தலையிலேயே போட்டு விடுகிறாள் .இதுவும் சிவன் விளையாட்டே . ஐயன் அவள் முன் தோன்றி விட்டான்.அவளுக்கு முக்தி கிடையாது என்றும் , காசியிலேயே ஒரு சேரியில் வசிக்கவேண்டும் என்றும் கட்டளை இட்டு விட்டான் . பின் காசிக்கு வருபவர்கள் தவறாமல் அவளை தரிசித்தால் தான் யாத்திரை பூர்த்தி அடையும் என்று சொல்லி வைத்தான் . அப்படி தரிசிப் பவர்கள்அவளுக்கு 4 சோழிகளை காணிக்கையாய் தரவேண்டும் என்றும் சொல்லி வைத்தான் . சோழி அவளுக்கென்றும் ,புண்ணியம் சோழி கொடுப்பவரையும் சேரும் என்றும் சொல்லி வைத்தான் .அப்படி செய்யாதவர்களின் புண்ணியம் அத்தனையும் அவளையே சேரும் என்று வேறு சொல்லிவிட்டான். நானும் , விலாசினியும் புண்ணி யத்தை விட மனமில்லாமல் அவளை தரிசித்து 4சோழிகளை 
சமர்ப்பித்தோம் . அவற்றில் இரண்டை ப்ரஸா தமாக திரும்ப பெற்றுக் கொண்டோம் . அந்த அம்மன் தான் சோழி அம்மன் என்று அழைக்கப் படுகிறாள் . இதில் இருந்து , “தீண்டாமையைஇறைவனும் விரும்பியதில்லை ” என்பது நிதர்சனமாக தெரிகிறது . பின் , நாட்டுக் கோட்டை நகரத்தார் மடத்தில் இருக்கும் தங்க அன்ன பூரணியை தரிசித்தோம் . வரிசையில் இரண்டுமணி நேரம்நின்றி ருந்தோம் . அப்பொழுது மனதில் தோன்றிய பாடல்தான் ” தங்க அன்ன பூரணி , கங்காதீர வாஸினி ” என்பதாகும். சீக்கிரமே உங்களுடன் பகிர இருக்கிறேன் . 
மறு நாள் அமாவாஶ்யை.

பாகம் -16
மறு நாள் 19/10/2017 அன்று அமாவாஶ்யை. ஹனுமான் காட்டுக்கு சென்று கங்கையில்
ஸ்நாநம் செய்து , பிறகு வாத்யார் அஹத்தில் , தர்ப்பணம் செய்தோம். அதன் பின் , ஒரு மாதத்தை குறிக்கும் வகையில் 30+1=31 விளக்கு தானமும் , வருடத்தில் 24 த்வாதசிகளை குறிக்கும் 24பாத்திரங்களில் (small tumblers) பாயச தானமும் செய்தோம். பாயச தானத்தின் போது , துளசி பூஜை செய்தது விசேஷம் . இவை எல்லாம் முடிந்த பின் நண்பர் ஸ்ரீ சுந்தரேஶ மாமாவாத்தில் சாப்பாடு .
         அன்று இரவு , ஒரு புடவைக் கடைக்கு சென்று , புடவை வாங்க விலாசினி ஒரு அட்ரஸ் வாங்கி வைத்திருந்தாள் . ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம் . காசியில் , ஆட்டோ என்பதுmodified cycle riksha தான் . எதிரும் புதிருமாக , தாராளமாக ஐந்து பேர் உட்காரலாம் .அட்ரசை சொன்னால் , ஆட்டோகாரருக்கு புரியவில்லை . இரவு மணி எட்டு . வியாபாரம் என்றால் என்ன , என்பதை காசி வாலாக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் .ஆட்டோ காரர்களுக்கும், வ்யாபாரிகளுக்கும் நல்ல  tie up இருக்கிறது .ஆட்டோ காரர் அட்ரஸ் ஸ்லிப்ல் இருந்த டெலி போன் நம்பரை பார்த்து போன் செய்து , இடத்தை கண்டு பிடித்து கடைக்கு அழைத்துப் போய் விட்டார் . அப்பொழுதுதான் தெரிகிறது கடை பூட்டி ஆகி விட்டது என்று . ஆனால்கடைக்காரர் சாமர்த்யசாலி . வீட்டிலிருந்து சாவியைக் கொண்டு வந்து , கடையைத் திறந்து விட்டார் . எங்களுக்கு உச்சி குளிர்ந்து விட்டது.
      விலாசினி , நான்கு புடவைகள் வாங்கினாள் . அவள் பேரம் பண்ணி வாங்கியதை பார்த்து வியந்து போனேன் . நானாய் இருந்தால் கேட்டதை கொடுத்துவிட்டு வந்திருப்பேன் . மேலும் அவள்விரும்பிய டிசைனில் , ஒரு புடவை அங்கு இல்லை . அதை குறித்துக் கொண்டு மறு நாள் லாட்ஜிலேயே நாங்கள் சொன்ன நேரத்தில் கொண்டு வந்து கொடுத்து விட்டான் .
விலாசினி , தங்க அன்ன பூரணியும் , லட்டுத் தேரும் , பார்க்க ஆசைப் பட்டதினால் தான் , இந்த காசி யாத்திரையை , தீபாவளி சமயத்தில் ஏற்பாடு செய்திருந்தோம். நாளை 20/10/2017 தங்க அன்னபூரணியையும் , லட்டுத் தேரும் பார்க்க செல்ல வேண்டும்.

பாகம் – 17
நண்பர்களே , 20/10/2017 உடன் எங்கள் காசி யாத்திரை இனிதே நிறைவு பெறுகிறது .
காசிக்கு சென்றும் , மஹா வாராஹி அம்மனை தரிசனம் செய்யாவிட்டால் எப்படி ? விடியற் காலையிலேயே எழுந்து ஸ்நாநம் செய்து , நேற்று புடவைக் கடைக்கு அழைத்துச் சென்ற , ஆட்டோவிலேயே , தரை மார்க்கமாக (போட்டிலும் செல்லலாம்) வாராஹியை தரிசிக்கச் சென்றோம். அந்த ஆட்டோகாரர் மிகவும் அன்பானவராக இருந்தார் . கோயிலுக்கு ஆட்டோவில்இருந்து இறங்கி , ஐந்து நிமிடம் நடக்க வேண்டும் . இறக்கி விட்டு விட்டு , போய்க் கொள்ளுங்கள் என்று அவர் சொல்லி இருக்கலாம் . ஆனால் , எங்கள் கூடவே வந்து , அம்மனை தரிசனம் செய்ய வைத்தார்.  அம்மன் , நிஜமாலுமே மஹா(பெரியவாராஹி தான் . 
கோவில் உள்ளே இரண்டு த்வாரங்கள் உள்ளன . ஒன்றின் வழியாக அம்மனின் முகத்தையும்,
மற்றதின் வழியாக , அவள் பாதத்தையும் தரிசனம் செய்ய வேண்டும். அம்மன் அவ்வளவு பெரியவள் . தரிசனம் செய்யும் போது , அவள் சன்னதியின் அதிர்வுகளை நன்கு உணர முடிந்தது . மூல மந்திரம் சொல்லச்சொல்ல , அதிர்வுகளை என் உடலிலும் உணர்ந்தேன் . மனது மிகவும் அமைதியானது . வாராஹி உக்ரமா னவள் இல்லை . சாந்தியை தருபவள்.
தரிசனம் முடிந்ததும் , ஆட்டோகாரர் , திரும்பவும் லாட்ஜில் கொண்டு வந்து விட்டார் . பணம் அதிகம் கொடுக்க முனைந்த போது மறுத்துவிட்டார் . பிறகு , சுந்தரேச மாமா உதவியுடன் (உதவிஇல்லாவிட்டால் அன்றுதரிசனம் செய்திருக்க முடியாதுதங்க அன்ன பூரணியையும் , லட்டுதேரையும் தரிசனம் செய்தோம் .லட்டுத் தேருக்குள் , ஒரு லட்டு மாதிரி அன்ன பூரணி அமர்ந்திருந்தாள்.அவளை தரிசிக்கும் போது தோன்றிய பாடல்தான் ” லட்டுத்தேரில் அமர்ந்தருளும் லட்டே அன்னபூரணி ” ஆகும் . காசி க்ஷேத்ர க்ருதி – 1 ஆக உங்களுடன் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் . பிறகு ,கைலாச நாதர் கோயில் மாடியில் , கைலாசத்தையே கண் முன் கொண்டு வந்திருந்தார்கள் . அங்கு , அன்னையிடம் , கை ஏந்தி நிற்கும் பிக்ஷாண்டவரை தரிசனம் செய்தேன் . காசிக்கு செல்வதற்குமுன்பே இவர் என் கனவில் தரிசனம்
தந்து விட்டார் . இவரைப் பார்ப்பதற்கு முன்னமேயே ” அன்னையிடம் பிக்ஷை ஏந்திடும் ஈசா ” என்ற க்ருதியை இயற்றி விட்டேன் . கூடிய சீக்கிரமே உங்களுடன் பகிர உள்ளேன் . கயிலாய தரிசனம் காண ஒரு இரும்பு சங்கிலியை பிடித்து ஏற வேண்டும் . ஆண்டவனைக் காண ஏற்படும் தடைகளைத்தான் , அந்த சங்கிலி குறிப்பதாக எனக்கு தோன்றியது . தரிசனம் முடிந்து , 20/10/2017 இரவு flight ல் கிளம்பி 21/10/2017 விடியற்காலை 2.30 க்கு திரும்பவும் சென்னை வந்தடைந்தோம் . இன்றளவும் , தூக்கத்தில் கங்கை சல சல வென்று ஓடுகிறாள்.மனது இன்னொருதரம் காசி செல்ல ஏங்குகிறது . இறைவன் மனது  வைப்பானா ? பார்ப்போம்.உங்கள் எல்லோருக்கும் எல்லா நலண்களையும் அருள வேண்டிஇறைவனை ப்ரார்த்திக்கும் 

உங்கள்
சேது  & விலாசினி