வாத்யமர்களின் சிறப்பான பாரம்பரியத்தைப்பற்றித் தெரிந்துகொள்வதற்குமுன் ‘வாத்யமா’ என்ற சொல்லின் சொற்பிறப்பியலைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

‘வாத்யமா’ என்ற சொல் ‘மாத்யமா’ என்ற சொல்லிலிருந்து மருவியதாகும். பௌத்த தத்துவ ஞானி நாகார்ஜுனாவின் மாத்யாமிகா பிரிவைச் சேர்ந்தவர்களே மாத்யமர்கள்.

ஆதிசங்கரரின் பரம குருவான கௌடபாதர், மாத்யமிகா தத்துவம், உபநிஷதத்தின் ‘நேதி நேதி’ தத்துவத்தை ஒத்திருந்ததால் மாத்யமர்களை அத்வைத வேதாந்ததில் ஒருங்கிணைக்கும் முயற்சியைத் தொடங்கினார்.

பிற்காலத்தில் ஆதிசங்கரர் மாத்யமர்களின் ஆய்வுத்திறனால் கவரப்பட்டு அவர்களுடைய நுட்பத்தைத் தன்னுடைய அத்வைத ஸ்தாபனத்தில் தானும் கையாண்டார். இதுவே மாத்யமர்களுக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மாத்யமர்கள் அவரோடு காஞ்சிபுரம் இடம் பெயர்ந்தனர்.

இந்த இடத்தில் பௌத்தக் குடியிருப்புகள் பல இருந்தததாகக் கிடைத்துள்ள சான்றுகள் இதன் சாத்தியக்கூறை விளக்குகின்றன. இந்த இடத்தில் மாற்றம் முழுமை அடைந்திருக்கலாம்.

பிறகு அவர்கள் தஞ்சை மாவட்டத்திலுள்ள கூந்தலூரைச் சுற்றியுள்ள இடங்களில் குடியேறியதற்குச் சரித்திரச் சான்றுகள் உள்ளன என்பது இதைப்பற்றி விரிவான ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ள பேராசிரியர் கோனேரிராஜபுரம் திரு கே.கல்யாணராமன் அவர்களின் கருத்து.

வாத்யமர்கள் 16ஆம் நூற்றாண்டுக்கும் 18ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து, இந்த 18 கிராமங்களில் குடியேறினார்கள் என்று பரவலாக நம்பபடுகிறது. வாத்யமர்கள் வருணாசிரம முறைகளை கடைப்பிடித்து வேதவிற்பன்னர்களாகவும், ஞானபண்டிதர்களாகவும், நித்யகர்மா அனுஷ்டானங்களை செய்பவர்களாகவும், தர்மிஷ்டர்களாகவும், கடவுள் பக்தி மிக்கவர்களாகவும், சுதந்திர போராட்ட தியாகிகளாகவும், கதா காலக்ஷேபம் செய்பவர்களாகவும், இசைக் கலைஞர்களாகவும், ஓவியம், எழுத்து, மருத்துவம், விஞ்ஞானம், அரசுத்துறைகள் போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கி வந்துள்ளார்கள்.

‘புரம் பஞ்சகம், ஊர் பஞ்சகம், குடிவித்யம் கொண்டான், படி, காடு, தை, துறை, மூலை என முடியும் பதினெட்டு வாத்யம கிராமம்.” என்ற பாடல் உண்டு. புரம் என முடியும் ஊர்கள் ஐந்து. ஆனதாண்டவபுரம், திப்பிராஜபுரம், கோனேரிராஜபுரம், விஷ்ணுபுரம், சேங்காலிபுரம்,.ஊர் என முடியும் ஊர் ஐந்து; மொழையூர், தேதியூர், சித்தன்வாழூர், கூந்தலூர், பாலூர். குடி என முடியும் ஊர் இரண்டு; செம்மங்குடி, தூத்துக்குடி கொண்டான் என்பது முடிகொண்டான், படி என்பது மாப்படி, காடு என்பது அரசவனங்காடு, தை என்பது மாந்தை, துறை என்பது மரத்துறை. மூலை என்பது தட்டாத்திமூலை.

இப்படி 18 வாத்யம கிராமங்கள். ஆனால் தற்சமயம் வாத்யம கிராமங்களில் வடமாள், பிரஹசரணம் தவிர அனைத்து இன மக்களும் வசித்துவருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.